📅 Saturday, 03 October 2026 IST | புரட்டாசி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 03, 2026 05:04 PM

சிங்கப்பூர்: இஸ்லாமியப் போதனைக்கு பதிவு அவசியம்

சிங்கப்பூர்: இஸ்லாமியப் போதனைக்கு பதிவு அவசியம்

சிங்கப்பூரில் பத்து அல்லது அதற்கும் மேற்பட்டோருக்கு இஸ்லாமியப் போதனை அல்லது வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தும் தனிப்பட்டோரும் அமைப்புகளும் முஸ்லிம் சமயப் பள்ளியாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) தெரிவித்துள்ளது.

போதனைகளும் வகுப்புகளும் நேரடியாக மட்டுமின்றி இணையம் வாயிலாக நடத்தப்பட்டாலும் இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் என்று சனிக்கிழமை (அக்டோபர் 3) வெளியிட்ட அறிக்கையில் முயிஸ் குறிப்பிட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் சமயப் பள்ளிகளை ஆய்வு செய்ய முயிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.

நேரடியாகவோ இணையவழியிலோ நடைபெறும் இஸ்லாமிய போதனை வகுப்புகளில் அந்த அதிகாரிகள் கலந்துகொண்டு அவற்றைப் பார்வையிடலாம்.

வெள்ளிக்கிழமை (அக்டாபர் 2) முதல் நடப்புக்கு வந்துள்ள புதிய நடைமுறையின்கீழ் சிங்கப்பூரில் உள்ள கிட்டத்தட்ட ஐம்பது தனிப்பட்டோரும் அமைப்புகளும் முஸ்லிம் சமயப் பள்ளிகளாகப் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே பதிவுசெய்துள்ள முஸ்லிம் சமயப் பள்ளிகள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

முஸ்லிம் சமயப் பள்ளி எனும் வரையறைக்குள் வரக்கூடிய, ஆனால் இதுவரை பதிவு செய்யாத அமைப்புகள், பதிவுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 2027 மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை அவை தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும்.

குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் போதனை வழங்குவதற்கோ குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் சமயக் கருத்துகளைப் பகிர்வதற்கோ இந்தப் புதிய நடைமுறை பொருந்தாது என்று முயிஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

மேலும், போதனை அல்லாத பிற சமயச் சேவைகளுக்கும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இணையவழிக் கற்றல் உட்பட இஸ்லாமிய சமயக் கல்வியின் பாதுகாப்பை பலப்படுத்தவும் தகுதிவாய்ந்த, அங்கீகரிக்கப்பட்ட சமய ஆசிரியர்களால் அவை வழங்கப்படுகின்றன என்பதை உறுதிசெய்யவும் புதிய நடைமுறையை முயிஸ் அமல்படுத்தியுள்ளது.