சீழ்ப்பிடிப்பை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க புதிய திட்டம்
உலகளவில் நிகழும் மொத்த மரணங்களில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமான உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாக விளங்கும் ‘செப்சிஸ்’ எனப்படும் சீழ்ப்பிடிப்பு நோயை முன்கூட்டியே கண்டறிந்து நிர்வகிப்பதற்கான புதிய முறையொன்றை டான் டோக் செங் மருத்துவமனை குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
சீழ்ப்பிடிப்பு என்பது மனித உடலில் ஏற்படும் கிருமித் தொற்றுக்கு எதிராக உடல் காட்டும் தீவிரமான எதிர்வினையாகும். நோய்க்கிருமிகளை அழிக்க உடல் வெளியிடும் ரசாயனங்கள், அழற்சியை ஏற்படுத்துவதால் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் முக்கிய உறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் குறைகிறது. இதனைத் தக்க சமயத்தில் கவனிக்கத் தவறினால், திசுக்களில் சேதம், உறுப்புகள் செயலிழப்பு அல்லது மரணம் ஏற்படக்கூடும்.
‘லான்செட் குளோபல் ஹெல்த்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, 2021ஆம் ஆண்டில் உலகளவில் ஏறத்தாழ 166 மில்லியன் சீழ்ப்பிடிப்பு பாதிப்புகள் பதிவாகின. அதே ஆண்டில் இந்த நோயால் 21.4 மில்லியன் பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், டான் டோக் செங் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் தாதியர்களை முதன்மையாகக் கொண்டு வழிநடத்தப்படுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை முன்கூட்டியே அடையாளங் காண்பதையும் அவர்களுக்கு விரைவான சிகிச்சையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் தொடங்குவதற்கு முன்பு, சீழ்ப்பிடிப்பு நோயாளிகளுக்கு ‘ஆண்டிபயாடிக்’ எனப்படும் கிருமிக் கொல்லி மருந்துகளைச் செலுத்துவதற்கான சராசரி நேரம் 220 நிமிடங்களாக இருந்தது என்று இத்திட்டத்தின் மருத்துவத் திட்டத் தலைவர் மருத்துவர் ஹுவாங் வென்ஹுய் தெரிவித்தார்.
மருத்துவமனையின் பொது மருத்துவப் பிரிவின் மூத்த ஆலோசகரான ஹுவாங், நோயாளிகள் பிழைப்பதற்கான வாய்ப்பைக் கணிசமாக அதிகரிக்கும் 180 நிமிடங்களுக்குள் வெறும் 37 விழுக்காடு நோயாளிகள் மட்டுமே கிருமிக் கொல்லி மருந்துகளைப் பெற்றதாகக் குறிப்பிட்டார்.
எனவே, இந்த முக்கியமான 180 நிமிடக் காலக்கெடுவுக்குள் குறைந்தபட்சம் 80 விழுக்காடு நோயாளிகளுக்குக் கிருமிக் கொல்லி மருந்துகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் நோக்கில் ‘சேஃப் ஃப்ரம் செப்சிஸ்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
“தாதியர்களுக்கு நோயாளிகளைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால், அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நோயாளிகளிடம் ஏற்படும் நுட்பமான மாற்றங்களை அவர்கள் உடனடியாக உணர்ந்துகொள்வர்,” என்று ஹுவாங் கூறினார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இந்தப் புதிய திட்டத்தின்கீழ், காய்ச்சல், மூச்சுத்திணறல், மனநிலையில் ஏற்படும் மாற்றம் போன்ற சீழ்ப்பிடிப்பின் தொடக்கக்கால அறிகுறிகளையும் தொற்றுப் பரவலுக்கான மூலங்களையும் தாதியர்கள் கண்டறிய உதவும் வகையில் கட்டமைக்கப்பட்ட மதிப்பீட்டுக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘சேஃப் ஃப்ரம் செப்சிஸ்’ திட்டம் அனைத்துலக அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. பேங்காக்கில் அண்மையில் நடைபெற்ற ஆசிய மருத்துவமனை நிர்வாக விருது வழங்கும் விழாவில், மருத்துவத் திறன் மேம்பாட்டுக்காக திட்டத்தை உருவாக்கிய குழுவுக்குத் தங்க விருது வழங்கப்பட்டது.
நீண்ட காலத்தில், இந்தச் சிறந்த திட்டத்தை என்எச்ஜி ஹெல்த் பொது சுகாதாரக் குழுமத்தின்கீழ் உள்ள பிற நிறுவனங்களுக்கும் அதற்கு அப்பாலும் விரிவுபடுத்த டான் டோக் செங் மருத்துவமனை விரும்புவதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.