செப்டம்பர் 11 தாக்குதலின் 25ஆம் ஆண்டு: நம்பிக்கையும் ஒற்றுமையும் தாங்கி நிற்கச் செய்தன
செப்டம்பர் 11 தாக்குதலின் 25ஆம் ஆண்டு: நம்பிக்கையும் ஒற்றுமையும் தாங்கி நிற்கச் செய்தன – பேராயர் ஹிக்ஸ்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
நியூயார்க், வாஷிங்டன் டி.சி. மற்றும் பென்சில்வேனியா ஆகிய இடங்களில் ஏறத்தாழ 3,000 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்துயரச் சம்பவத்தின்போது மக்களை நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் ஒற்றுமை எவ்வாறு தாங்கி நின்றன என்பதை நியூயார்க் பேராயர் ரொனால்ட் ஹிக்ஸ் அவர்கள் நினைவுகூர்ந்துள்ளார்.
அந்நாள்களில் இடம்பெற்றவற்றை நினைவுகூர்ந்த பேராயர் ஹிக்ஸ் அவர்கள், அனைத்தும் சிதறும்போது மக்கள் பெரும்பாலும் கடவுள், நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கு ஆகியவற்றை நாடுகிறார்கள் என்று கூறினார். மேலும் மற்றவர்களை காப்பாற்ற முற்பட்ட போது உயிர்விட்ட நியூயார்க் தீயணைப்புத் துறையின் அருள்பணியாளரான மைக்கேல் ஜட்ஜ் உள்பட அவசர கால படை வீரர்களின் தைரியத்தை அவர் எடுத்துரைத்தார். அவரது தியாகம் சுயநலமற்ற அன்புக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் பேராயர் கூறினார்.
25 வது ஆண்டு நிறைவையொட்டி, நியூயார்க் முழுவதும் உள்ள ஆலயங்கள் காலை 8:46 மணிக்கு தங்கள் ஆலய மணிகளை ஒலிக்கச் செய்தன, இது முதல் விமானம் உலக வர்த்தக மையத்தைத் தாக்கிய தருணத்தைக் குறிக்கிறது. புனித பேட்ரிக் பெருங்கோவிலில் நடந்த நினைவுத் திருப்பலியில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், அவசர கால படையினர், குடிமைப் பணித் தலைவர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் பல்வேறு நம்பிக்கை கொணட சமூகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
அமைதியை உருவாக்குவதற்கு உரையாடலும் சகோதரத்துவமும் இன்றியமையாதவை என்று பேராயர் ஹிக்ஸ் அவர்கள் வலியுறுத்தினார். திருத்தந்தையர்கள் இரண்டாம் ஜான் பால், பதினாறாம் பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸ் ஆகியோரின் செய்திகளை நினைவுகூர்ந்த அவர், பிரிவினைகளை வென்று அமைதிக்காக இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இறுதியாக, "நாம் எப்போதுமே கைவிடப்படுவதில்லை. நாம் எப்போதுமே தனியாக இல்லை." என்ற நம்பிக்கை அளிக்கும் செய்தியுடன் அவர் தனது செய்தியை நிறைவு செய்தார்.