📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 06, 2026 11:04 AM

சென்னை வாகன ஓட்டிகளே உஷார்.. ஒரே நாளில் 1407 வழக்குகள் பதிவு.. போக்குவரத்து போலீசார்

சென்னை வாகன ஓட்டிகளே உஷார்.. ஒரே நாளில் 1407 வழக்குகள் பதிவு.. போக்குவரத்து போலீசார்

சென்னை வாகன ஓட்டிகளே உஷார்.. ஒரே நாளில் 1407 வழக்குகள் பதிவு.. போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை!

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட பைக்குகளில் வந்த இளைஞர்கள் பைக் சாகசத்திலும், ரேஸிலும் ஈடுபட்டு பொதுமக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

சென்னையில் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் ஒரே நாளில் 1407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளுவர்கோட்டத்தில் இளைஞர்கள் அட்டகாசம்

சென்னையில் நள்ளிரவில் இளைஞர்கள் கும்பலாக சேர்ந்துக் கொண்டு பைக் ரேஸில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. பைக்கை வேகமாக முறுக்கி அதிக சத்தத்தை எழுப்புவதால் தூங்கிக் கொண்டிருக்கும் மக்கள் கடும் சிரமங்களை சந்திக்கின்றனர். சென்னை மாநகர போலீசாரும் நடவடிக்கை மேற்கொண்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதில் பல போதையில் இதுபோன்ற அட்டகாசங்களில் ஈடுபடுகின்றனர்.

இப்படியான நிலையில் நேற்று (அக்டோபர் 4) அதிகாலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட பைக்குகளில் வந்த இளைஞர்கள் பைக் சாகசத்திலும், ரேஸிலும் ஈடுபட்டு பொதுமக்களை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர். விசாரணை செய்ய வந்த காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம்

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர். அதன்படி அக்டோபர் 4ம் தேதி அதிகாலை, சுமார் 15 முதல் 20 அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனங்களில் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகே, பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், ஆபத்தான முறையில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டி, சாகசத்தில் ஈடுபட்டனர்.

மேற்கண்ட சம்பவம் தொடர்பாக, போக்குவரத்து புலனாய்வு பிரிவு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட 16 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சாகசத்திற்கு பயன்படுத்திய 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறைனரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகனத் தணிக்கையின்போது, பதிவு எண் பலகைகள் இல்லாமல் இயக்கப்பட்ட 56 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் சாகசம் என்ற பெயரில் வீலிங் செய்து, சாகசத்தில் ஈடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதில் ஈடுபட்டவர்கள் சிறார்களாக இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் பெற்றோர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற ஆபத்தான போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100, காவல் உதவி செயலி, சென்னை பெருநகர போக்குவரத்து வாட்ஸ்அப் புகார் எண் 90031 30103 மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல்துறையினரால் தீவிர கண்காணிப்புடன் கூடிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி