அரசியல் பதவி வகிப்போரின் சம்பளம் 15 ஆண்டுகளாக மாறவில்லை : நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்
சிங்கப்பூரில் அரசியல் பதவி வகிப்போர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் ஒரே நிலையிலேயே இருந்து வருவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) நண்பகல் நாடாளுமன்றத்தில் அமைச்சர்நிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், அரசு நிர்வாகத்திலும் தனியார் துறையிலும் சம்பளம் தொடர்ந்து உயர்ந்து வரும் வேளையில், அரசியல் பதவிகளுக்கான சம்பளம் மட்டும் மாற்றமின்றி நீடிப்பதைச் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2012ஆம் ஆண்டு இத்தலைப்பு குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது, ஆளும் மக்கள் செயல் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சிக்கும் இடையே கணிசமான கருத்து ஒற்றுமை நிலவியதைத் திரு வோங் நினைவுகூர்ந்தார்.
பாட்டாளிக் கட்சி சம்பளத்தைக் கணக்கிட வேறுபட்ட உத்தியைப் பரிந்துரைத்தபோதிலும், அதன் மூலம் பெறப்பட்ட இறுதிச் சம்பள அளவுகள் ஏறக்குறைய ஒரே வரம்பிற்குள் அமைந்திருந்தன என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
அரசியல் பதவி வகிப்போர் , நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் தொடர்பான அடிப்படைக் கொள்கைகளில் நாடாளுமன்றத்தின் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
அதன்படி, மறைமுக நன்மைகளோ, சிறப்புச் சலுகைகளோ இன்றிச் சம்பளம் முற்றிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்ற பிரதமர், அதேவேளையில் திறமையான நபர்களைப் பொதுச்சேவைக்கு ஈர்க்கும் வகையில் சம்பளம், போதுமான போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.