📅 Sunday, 20 September 2026 IST | புரட்டாசி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 20, 2026 12:00 AM

"அந்தோனி" படம் மூலமாக ஆஸ்கரை நோக்கி செல்லும் இளையராஜா

"அந்தோனி" படம் மூலமாக ஆஸ்கரை நோக்கி செல்லும் இளையராஜா

"அந்தோனி" படம் மூலமாக ஆஸ்கரை நோக்கி செல்லும் இளையராஜா

இளையராஜாவின் இசை வரலாற்றில் முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம் எனும் பெருமைய கொண்ட அந்தோனி படத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published : September 19, 2026 at 11:05 PM IST

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகியுள்ள இலங்கை தமிழ்த்திரைப்படம் “அந்தோனி” ஆஸ்கரை நோக்கி பயணித்துள்ளது.

‎தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்த இளையராஜா, ஆரம்ப காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் பாடகராக வாழ்வை துவங்கினார். இசையில் தன்னை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு தனது சகோதரர்களுடன் வந்த அவர், இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் பணியற்றி இருக்கிறார்.

‎1976-இல் அன்னக்கிளி திரைப்படத்தில் பஞ்சு அருணாச்சலம், இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த 25 ஆண்டுகள் இளையராஜாவின் காலமாக மாறிப்போனது. இதுவரை மொத்தமாக 1500-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 7,000 மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக காதல், குறும்பு, சோகம், வலி, வேதனை, துக்கம், மகிழ்ச்சி போன்ற அனைத்து விதமான உணர்ச்சிகளுக்கும் ஆகச்சிறந்த இசையை கொடுத்திருப்பவர் இளையராஜா. சிறந்த இசை மற்றும் பின்னணி இசைக்காக ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ள இவர், இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். லண்டனில் சிம்பொனி இசையை அமைத்தவர் என்கின்ற பெருமைக்குரிய ஆசிய இசையமைப்பாளர் இளையராஜா, மேலும் போற்றுதலுக்கு உரிய வகையில் திருவாசகத்திற்கு சிம்பொனி இசையையும் அமைத்திருக்கிறார்.

அந்தோனியின் ஆஸ்கரை நோக்கிய பயணம்

இந்நிலையில், இளையராஜா இசையில் உருவான 'அந்தோனி' இலங்கை தமிழ் திரைப்படம் அண்மையில் உலகமெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக இரமணதாஸ், சுகந்தினி இரமணதாஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கயல் வின்சன்ட், TJ.பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா, ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோரின் இயக்கி உள்ளனர். இந்த திரைப்படம் மூன்று மொழிகளில் உருவாகி உள்ளது.

‎திரையரங்குகளை தொடர்ந்து இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ, OTT Plus, Shortflix, Tentkotta, Roopahala போன்ற பல முன்னனி OTT தளங்களில் திரைப்படம் வெளியாகி உள்ளது.

‎இந்நிலையில் ‘அந்தோனி’ திரைப்படம் இன்று இலங்கை திரைப்படக் கூட்டுஸ்தாபனத்தின் மூலம் 2027ம் ஆண்டின் சிறந்த சர்வதேச திரைப்படப்பிரிவில் ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவுக்கு அனுப்பியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

‎உலகறிந்த இசை மேதை இளையராஜாவின் இசை வரலாற்றில் முதல் இலங்கைத் தமிழ் திரைப்படம் எனும் பெருமைய கொண்ட இப்படைப்பிற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக ஏற்கனவே கமல்ஹாசன் - இளையராஜா கூட்டணியில் வெளியான தேவர் மகன், ஹே ராம் போன்ற படங்கள் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.