📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 16, 2026 10:33 PM

அன்பில் மகேஷ் ரெய்டு: கண்டனம் கூட உதயநிதி..! நட்பில் பிளவா?

அன்பில் மகேஷ் ரெய்டு: கண்டனம் கூட உதயநிதி..! நட்பில் பிளவா?

அன்பில் மகேஷ் ரெய்டு: கண்டனம் கூட உதயநிதி..! நட்பில் பிளவா?

திமுகவில் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சுற்றி தற்போது அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அடுத்தடுத்த பரபரப்புகள் உருவாகியுள்ள நிலையில், அவரது இடங்களில் நடந்த ரெய்டு தொடர்பாக உதயநிதி கண்டனம் தெரிவிக்காதது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

அன்பில் மகேஷ் – உதயநிதி ஸ்டாலின் இடையேயான நெருக்கத்தில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாக கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்கள், தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. அன்பில் மகேஷ் குடும்பத்துக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் பல தலைமுறைகளாகத் தொடரும் நட்பு இருப்பதாக திமுக வட்டாரங்களில் தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில், இருவரும் சமீபத்திய சில நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பங்கேற்கவில்லை என்ற தகவல்களும் வெளியாகி பேசு பொருளாகியது.

“பொய் சொல்லி திசைதிருப்பும் வேலை...”

இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ், உண்மையை நிரூபிக்க பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும், அதேநேரத்தில் பொய் சொல்லி மக்களைத் திசைதிருப்பும் வேலை சாதாரணமாக நடந்து வருவதாகவும் கூறினார். அவரது இந்தப் பேச்சும், அவர் தற்போது எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் சட்டரீதியான சூழலுடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி திமுகவில் யார் கையில் அதிகாரம்?

இதற்கிடையே, திமுகவின் மாவட்ட அமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களும் அன்பில் மகேஷின் அரசியல் செல்வாக்கு குறித்த விவாதத்தை அதிகரித்துள்ளன. திருச்சி மாவட்டம் ஏற்கெனவே பல கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், மறுசீரமைப்புக்குப் பிறகு மூத்த தலைவரான கே.என். நேருவின் அதிகாரம் குறைந்து, அன்பில் மகேஷின் அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகும் தகவல்களின்படி, அன்பில் மகேஷுக்கு இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்பும், மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய பொறுப்பு வேறு ஒருவருக்கும் செல்லலாம் என்ற பேச்சு கட்சிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக தரப்பில் இதுவரை இறுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ரெய்டு... திமுக தலைமையின் நிலைப்பாடு என்ன?

இந்தச் சூழலில்தான் செப்டம்பர் 16ஆம் தேதி அன்பில் மகேஷின் திருச்சி வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பெருமளவு பணம் வசூலித்ததாக எழுந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெற்றதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனை முடிந்த பின்னர், அன்பில் மகேஷ் போலீஸ் நடவடிக்கையை விமர்சித்ததுடன், விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அன்பில் மகேஷ் வீட்டில் நடந்த சோதனையை “அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை” என்றும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி என்றும் விமர்சித்துள்ளார். அன்பில் மகேஷ் வீட்டில் நடந்த சோதனைக்கு திமுக தலைமை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது நீண்ட கால நண்பரான உதயநிதி ஸ்டாலினிடமிருந்து தனிப்பட்ட கண்டனப் பதிவு எதுவும் வெளியாகவில்லை. இதுதான் தற்போது திமுக வட்டாரத்தில் எழுந்துள்ள முக்கியமான கேள்வி.

உதயநிதியிடம் “பார்ட்டி ஃபண்ட்”-ஐ மறைத்தாரா அன்பில் ?

அன்பில் மகேஷுக்கு எதிராக திமுக தலைமையிடம் ஏற்கெனவே சில புகார்கள் சென்றதாக கட்சிக்குள் பேசப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, “பார்ட்டி ஃபண்ட்” என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட பணம் தொடர்பாக முறைகேடு நடந்ததாகவும், தேர்தல் செலவுகளுக்காக கட்சியின் மூத்த தலைவர்களிடம் நிதி பெற்றிருந்த நிலையில், வசூல் தொடர்பான பல்வேறு புகார்கள் பின்னர் தலைமைக்கு சென்றதாகவும் சில கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் உதயநிதிக்கும் அதிருப்தி ஏற்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் இருந்த காலத்தில் ஆசிரியர் மாறுதல் உள்ளிட்ட விவகாரங்களில், கட்சி நிர்வாகிகள் பரிந்துரைகளுடன் சென்றபோது விதிமுறைகளின்படியே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாகவும், அதே நேரத்தில் தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலிக்க வெளிநபர்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கட்சிக்குள் புகார்கள் எழுந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்பில் மகேஷ் – உதயநிதி நட்பு நிலை என்ன?

ஒரு காலத்தில் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக அரசியல் வட்டாரங்களில் அறியப்பட்ட அன்பில் மகேஷைச் சுற்றி தற்போது இத்தனை கேள்விகள் எழுந்திருப்பது திமுகவில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், தன்னுடைய நண்பனுக்காக உதயநிதி ஒரு கண்டன பதிவுக் கூட போடாதது, அன்பிலை உதயநிதி கைவிட்டுவிட்டாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.