📅 Sunday, 27 September 2026 IST | புரட்டாசி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 26, 2026 08:04 PM

‘‘அம்பிகாவின் மோசடியை பொறுக்க மாட்டேன்!’’

‘‘அம்பிகாவின் மோசடியை பொறுக்க மாட்டேன்!’’

‘‘அம்பிகாவின் மோசடியை பொறுக்க மாட்டேன்!’’

நடிகை ராதா ஆவேசம்

1980-களில் தமிழ்த் திரையுலகில், முன்னணிக் கதாநாயகிகளாக ஜொலித்தவர்கள் அம்பிகா - ராதா சகோதரிகள். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் இருவரும் கவனம் செலுத்திவருகின்றனர்.

இந்த நிலையில், சகோதரி அம்பிகாவும், சகோதரன் மல்லிகார்ஜூன் ஆகியோர் தனது காசோலையைப் பயன்படுத்தி 42 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக அண்மையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகாரளித்திருக்கிறார் நடிகை ராதா.

இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகை அம்பிகாவும், அவரின் சகோதரர் மல்லிகார்ஜூனும் ராதா மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர். “சொத்துத் தகராறைத் தீர்க்க ராதாவே எழுதிக்கொடுத்த காசோலைதான் அது. காசோலையையும் எழுதிக்கொடுத்துவிட்டு, அதை நிறுத்திவைக்குமாறு வங்கிக்குத் தகவல் கொடுத்ததும் ராதாதான். எனவே, நான்தான் ராதா மீது புகார் கொடுக்க வேண்டும். உண்மையையெல்லாம் நான் சொல்ல ஆரம்பித்தால் ராதா சிறைக்குச் செல்ல நேரிடும்” எனக் குமுறலுடன் எச்சரித்திருக்கிறார். இந்த நிலையில் அம்பிகாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கேட்டு நடிகை ராதாவிடம் பேசினோம்...

“அக்காள் - தங்கைக்குள் என்னதான் பிரச்னை?”

“15 வயதில் திரையுலகில் நடிக்க வந்தேன். அந்த வயதில் எனக்கு என்ன தெரியும்... எல்லாமே எனக்கு என் அம்மாதான். எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன், வீட்டில் எவ்வளவு நகை இருக்கிறது, எங்கெங்கு இடங்கள் இருக்கின்றன என எதுவும் எனக்குத் தெரியாது. இப்படியே தொடர்ந்து 10 வருடங்கள் பிஸியாக 110 படங்கள் வரை நடித்துவிட்டேன். 1990-ல் திருமணம் நடந்தது. முன்னதாக 1988-ல் அம்பிகாவுக்குத் திருமணம் நடந்தது.

2006-ம் ஆண்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அம்மாவே முன்னின்று சொத்துகளைச் சமமாகப் பிரித்துக்கொடுத்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டுதான் அம்மா இறந்துபோனார். அதன் பிறகுதான் இவ்வளவு பிரச்னைகளும்.”

“உங்கள் குடும்பச் சொத்தான ‘ஏ.ஆர்.எஸ் கார்டனை நீங்கள் அபகரித்துவிட்டதாக’ அம்பிகா புகார் சொல்கிறாரே?”

“சொத்துப் பிரிப்பின்போது எனது பங்காக மதுரவாயல் (போரூர்) ஏ.ஆர்.எஸ் கார்டன் ஸ்டூடியோ கிடைத்தது. அப்போது புறநகர்ப் பகுதியாக இருந்ததால், அம்பிகா அந்தச் சொத்தில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, நகர்ப்புறத்திலுள்ள சொத்துகளை அவருக்குக் கேட்டு வாங்கிக்கொண்டார். குறிப்பாக 25 ஆயிரம் சதுர அடியிலான ‘தாய் மூகாம்பிகா’ பில்டிங்கை அப்போதே அவரது பங்காக வாங்கிக்கொண்டார். அன்றைய சூழலில், அந்த பில்டிங்கின் வாடகையே மாதம் 2 லட்சம் ரூபாய். ஆனாலும்கூட பின்னாளில் அதையெல்லாம் விற்று, அமெரிக்காவில் 2 வீடுகளையும் சொந்தமாக வாங்கிய அம்பிகா, அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், மதுரவாயல் பகுதி நகர்ப்புறமாக விரிவடைந்தது, மெட்ரோ ரயில் திட்டம் வந்தது போன்ற காரணங்களால், ஏ.ஆர்.எஸ் கார்டனின் நில மதிப்பும் உயர்ந்துவிட்டது. இந்த நிலையில், எனக்குச் சொந்தமான சொத்திலும் பங்கு கேட்டு அக்கா அம்பிகாவும், தம்பி மல்லிகார்ஜூனாவும் பிரச்னை செய்கின்றனர்.

ஆனால், பாகப்பிரிவினையின்படி ஏ.ஆர்.எஸ் கார்டன் எனது சொத்து. எனவே, அதை ‘ஆர்.ஆர்.கார்டன்’ என்று எனது பெயரில் ஏற்கெனவே மாற்றிக்கொண்டுவிட்டேன். பாகப்பிரிவினையின்போது அம்பிகாவுக்கு உரிய பங்காகச் சில சொத்துகளை அம்மாவே முன்னின்று எழுதிக்கொடுத்திருக்கிறார். ஆனால், அதைப் பற்றியெல்லாம் அம்பிகா இப்போது பேசுவதே இல்லை.

ஆர்.ஆர்.கார்டன் என்னுடைய சொத்து, என்பதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன. எனவே யாருக்காகவும், எதற்காகவும் அதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்; விற்கவும் மாட்டேன்.”

“ஏ.ஆர்.எஸ் கார்டனில் அம்பிகாவுக்கு உரிய பங்குக்கு மாற்றாக, நீங்கள் கையெழுத்திட்டுக் கொடுத்த காசோலையைத்தான் வங்கியில் செலுத்தியதாக அம்பிகா சொல்கிறாரே?”

“அந்தக் காசோலைகள் ஒன்றரை வருடத்துக்கு முன்பு நான் கையெழுத்திட்டுக் கொடுத்தவை. ஷூட்டிங் விஷயமாக நான் சென்னைக்கு வரும்போதெல்லாம், வளசரவாக்கத்திலுள்ள எங்களது குடும்ப வீட்டில்தான் தங்குவேன். அப்போது மின்சாரக் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட வீட்டுச் செலவுகளுக்காக வெற்றுக் காசோலைகளில் கையெழுத்திட்டு அம்பிகாவிடம் கொடுத்திருந்தேன். ஆனால், அதன் பிறகு நான் வங்கியிலிருந்து பல புதிய காசோலைப் புத்தகங்களை வாங்கிப் பயன்படுத்திவிட்டேன்.

அப்படியிருக்கும்போது, ஒன்றைரை வருடத்துக்கு முந்தைய பழைய காசோலைகளில் மொத்தம் 42 கோடி ரூபாயை இவர்களாகவே நிரப்பி, இப்போது ஏன் வங்கியில் கொடுக்க வேண்டும்... இதுபோல் காசோலை வந்திருக்கிறது என என் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வந்ததால், உடனே வங்கியைத் தொடர்புகொண்டு அந்தப் பரிவர்த்தனையை நிறுத்திவைத்துவிட்டேன். அதன் பிறகும் அதே போன்றதொரு காசோலையைத் திரும்பவும் வங்கியில் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் அவர்களது நோக்கம் என்ன?

சேமிப்புக் கணக்கில் யாராவது இத்தனை கோடி ரூபாயைப் போட்டு வைத்திருப்பார்களா... ஏன் என்னுடைய பழைய காசோலையை, இப்போது அவர்கள் பயன்படுத்த வேண்டும்... பணமின்றி காசோலை திரும்பினால், சம்பந்தப்பட்டவர்மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்ற ஆலோசனையின் பேரில்தானே இப்படியெல்லாம் செய்திருக்கிறார்கள்... ஆக, இந்த மோசடியின் பின்னணியை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால்தான், காவல்துறையில் புகாரளித்தேன்!”