📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 14, 2026 06:33 AM

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் புகார்; போக்குவரத்துத் துறை கடும் எச்சரிக்கை

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் புகார்; போக்குவரத்துத் துறை கடும் எச்சரிக்கை

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் புகார்; போக்குவரத்துத் துறை கடும் எச்சரிக்கை

கடந்த மூன்று தினங்களில் தமிழ்நாடு முழுவதும் 3,512 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

Published : September 13, 2026 at 9:06 PM IST

சென்னை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தால், பர்மிட் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் சுமார் 4900 ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 1000 ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள் இயக்கப்பட்டு வருகிறது.பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து சுமார் 3000 ஆம்னி பேருந்துகள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்காக இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் ஒரு லட்சம் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். இவ்வாறு செல்லும் பயணிகளின் நலன் கருதி சீரிய முறையிலும், சரியான கட்டணத்திலும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

குழு அமைத்து தணிக்கை

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடமிருந்து நடைமுறையில் உள்ள கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டதை தொடர்ந்து, கடந்த 3 தினங்களாக, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைத்து ஆம்னி பேருந்துகளில் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3,512 பேருந்துகளில் தணிக்கை

அதன்படி, கடந்த மூன்று தினங்களில் தமிழ்நாடு முழுவதும் 3,512 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 639 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கையின் போது, விதிமீறல்களுக்காக இணக்கம் ரூ.14,39,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளிடமிருந்து தமிழ்நாட்டிற்கு செலுத்த வேண்டிய வரியாக ரூ.27,58,243 வசூலிக்கப்பட்டது. மேலும் அபராதமாக ரூ.3,19,000 வசூலிக்கப்பட்டது. இதன் மூலம், கடந்த 3 தினங்களில் மட்டும் ஆம்னி பேருந்துகள் தொடர்பாக வரி மற்றும் இணக்கக் கட்டணமாக மொத்தம் ரூ.30,77,243 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தணிக்கையின் போது, 12.9.2026 அன்று, அதிக கட்டணம் வசூலித்ததாக கண்டறியப்பட்ட 11 ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பர்மிட் ரத்து செய்யப்படும்

ஆம்னி பேருந்துகளில் ஆன்லைன் மூலம் பயணிகளால் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை வாகன உரிமையாளர் ரத்து செய்யும் நேர்வில் அந்த பயணிகளுக்கு மாற்றுப்பேருந்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படவேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து அனுமதிச்சான்று ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

புகார் தெரிவிக்கலாம்

பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்த சிறப்பு வாகனத் தணிக்கை 16.9.2026 வரை மேற்கொள்ளப்படும்.