ஆசிய போட்டி: நடுவர்கள் Wide முடிவை திரும்ப பெறலாமா? ஐசிசி விதி என்ன சொல்கிறது?
ஆசிய போட்டி: நடுவர்கள் Wide முடிவை திரும்ப பெறலாமா? ஐசிசி விதி என்ன சொல்கிறது?
மும்பை: இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க டி20 கிரிக்கெட் போட்டியில், கடைசி ஓவரில் நடுவர் எடுத்த வைடு முடிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து ஐசிசி விதிமுறைகள் என்ன? நடுவர்கள் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள அனுமதி உண்டா? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
முக்கிய வீரர்கள் சிலர் இல்லாத நிலையிலும் இப்போட்டியில் களமிறங்கிய ஜப்பான் அணி, இந்திய அணிக்கு மிகக் கடுமையான சவாலை அளித்தது. கடைசி ஓவரில் ஜப்பான் அணியின் வெற்றிக்கு 4 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அக்சர் படேல் வீசிய லெக்-சைடு பந்தை, ஜப்பான் பேட்டர் அலெக்சாண்டர் ஷிராய்-பாட்மோர் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று தவறவிட்டார்.
முதலில் கள நடுவர் இதற்கு 'வைடு' என்று சைகை காட்டினார். ஆனால், பந்துவீச்சாளர் அக்சர் படேல் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நடுவரிடம் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு அதை முறையான பந்து என்று அறிவித்தார்.
இப்போட்டியில் ஜப்பான் அணி வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், நடுவரின் இந்த முடிவு ஆட்டத்தின் போக்கையே மாற்றிய முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. மேலும், நடுவரை இந்திய அணி வீரர்கள் அச்சுறுத்தி முடிவை மாற்ற வைத்ததாக சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில், பேட்டரின் லெக்-சைடு வழியாகச் செல்லும் பந்துகள் பொதுவாக வைடு என்று அறிவிக்கப்படும். ஆனால், தற்காலத்தில் பேட்டர்கள் ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்விட்ச்-ஹிட் போன்ற ஷாட்களை அதிகம் விளையாடுவதால், இந்த விதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. உதாரணமாக, லெக்-சைடு பந்து ஒன்றை ஒரு பேட்டர் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று, அதை முற்றிலும் தவறவிட்டால், அவருக்கு வைடு வழங்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
இருப்பினும், ஐசிசி-யின் அதிகாரப்பூர்வ விதிமுறைகளில் இத்தகைய ஷாட்கள் பற்றி நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஐசிசி-யின் தற்போதைய விதிமுறை 22.1-இன் படி, பந்துவீச்சாளர் வீசும் பந்தானது (நோ பால் தவிர்த்து), பேட்டர் நின்றிருக்கும் இடத்தைத் தாண்டி, சாதாரண பேட்டிங் நிலையில் அவர் நின்றிருந்தாலும் அடிக்க முடியாத தூரத்தில் சென்றால் அது வைடு ஆகும்.
கிரீஸில் நிமிர்ந்து நிற்கும் பேட்டரின் தலைக்கு மேல் பந்து சென்றால் அது வைடு ஆகும்.விதிமுறை 22.1.2' பேட்டர் தனது பேட் மூலம் சாதாரண கிரிக்கெட் ஷாட் அடிக்கும் வகையில் பந்து அவரது எல்லைக்குள் இருக்கும் வரை, அது வைடு பந்தாகக் கருதப்படாது.
இந்த ஆட்டத்தில், லெக்-சைடு சென்ற அனைத்து பந்துகளையும் வைடு என்று கருதுமளவிற்கு நடுவர் முதலில் செயல்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், ஜப்பான் பேட்டர் அலெக்சாண்டர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றதால், விதிமுறை 22.1.2-இன் படி அவர் பந்தை அடிக்கும் தூரத்தில்தான் இருந்தார் என்று இந்திய அணி தரப்பில் வாதிடப்பட்டது. அக்சர் வீசிய பந்து லெக்-சைடில் வேகமாகத் திரும்பியதால், பேட்டரால் அதை அடிக்க முடிந்திருக்குமா என்பது இன்னும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது.
நடுவர்கள் தங்கள் முடிவை மாற்றுவது மிகவும் அரிதான நிகழ்வு என்றாலும், ஐசிசி விதிமுறைகள் அதற்கு சான்றாக உள்ளது. விதிமுறை 2.12-இன் படி, "ஒரு நடுவர் தனது முடிவை உடனடியாக மாற்றியமைக்கலாம். ஆனால், அந்த மாற்றம் விதிமுறை 20.6-க்கு டெட் பால் முடிவை மாற்ற முடியாது என்ற விதி முரணாக இருக்கக்கூடாது. இதைத் தவிர்த்து, நடுவர் எடுக்கும் முடிவே இறுதியானது" என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னுதாரணமும் உள்ளது. கடந்த செப்டம்பர் 2024-இல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியின் போது, எலிஸ் பெர்ரி இதேபோல் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று தவறவிட்டார். அப்போது கள நடுவர் முதலில் வைடு கொடுத்தாலும், உடனடியாக தனது முடிவை மாற்றிக்கொண்டார். எனவே, ஐசிசி இந்த விதிமுறைகளை மேலும் தெளிவாக விளக்கும் வரை, இது போன்ற சர்ச்சைகளும் விவாதங்களும் கிரிக்கெட் போட்டிகளில் தொடரக்கூடும்.