📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 04, 2026 05:04 AM

ஆசிரியர் நாள்: சிங்கப்பூர் இளையர் இல்ல ஆசிரியரின் சேவை

ஆசிரியர் நாள்: சிங்கப்பூர் இளையர் இல்ல ஆசிரியரின் சேவை

ஒரு தலைமுறையின் எதிர்காலத்தைச் செதுக்குபவர்கள் ஆசிரியர்கள். சமுதாயத்தின் தூண்களாக விளங்கும் அத்தகைய ஆசிரியர்களைப் போற்றும் நாளாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4), இவ்வாண்டின் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

வழக்கமான வகுப்பறையைத் தாண்டி, வாழ்க்கைப் பாதையில் தடம்மாறிய இளையர்க்கு வழிகாட்டி, அவர்களது எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிப்பது கல்விச்சேவை. அத்தகைய உன்னதமான சேவையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களில் 67 வயதான ஆசிரியர் சு.திருநாவுக்கரசும் ஒருவர்.

திரு திருநாவுக்கரசு தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் 40 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது சிங்கப்பூர் சிறுவர் இல்லத்தில் (Singapore Boys Home) கல்வி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இல்லத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணியாற்றியபின் மீண்டும் தொழில்நுட்பக் கல்விக்கழகத்திற்குத் திரும்பி அங்கிருந்து ஓய்வுபெறத் திட்டமிட்டிருந்த நிலையில், மாணவர்களுக்காகத் தாம் தொடங்கிய பயிற்சிகளைத் தொடர இல்லத்திலேயே பணிக்காலத்தை நீட்டித்தார்.

சிறுவர் இல்லத்தில் வாரம் இருமுறை மின்சார இணைப்புப் பயிற்சி வகுப்புகளை (Electrical Wiring) நடத்துகிறார். மாணவர்களின் பன்முக வளர்ச்சிக்கு வெளி அமைப்புகளுடன் இணைந்து குடியிருப்புக் குழாய் பொருத்துதல், முடி திருத்துதல் போன்ற தொழில்நுட்பக் கல்விக்கழகச் சான்றிதழ்ப் பயிற்சிகளையும் அவர் ஒருங்கிணைக்கிறார். சமையற்கலை, ரொட்டி சுடுதல், உடற்பயிற்சி, கணினி அடிப்படைக் கல்வி போன்ற மேலும் பல பயிற்சி வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு அவர் வழங்கியுள்ளார்.

“இல்லத்திற்கு மாணவர்கள் வரும்போது அவர்களுடன் பழகி, புரிந்துகொண்டு, அவர்களை மாற்றி நல்வழியில் கொண்டுசெல்வோம். அதற்குச் சிறிது காலம் பிடிக்கும். அவர்கள் நல்லநிலையை அடைந்து, வெளியேறும் தருணத்தில் நன்றி கூறிச் செல்லும்போது எனக்கு மனநிறைவாக இருக்கும்,” என்றார் திரு திருநாவுக்கரசு.

இல்ல இளையர்களும் மற்ற இளையர்களைப் போலவே எதிர்காலக் கனவுகளைக் கொண்டவர்கள். சில நேரங்களில் கோபத்திற்கும் எளிதில் கவனச்சிதறலுக்கும் உள்ளாகும் இவர்களுக்குப் பல திறமைகள் உள்ளன என்று அவர் கூறினார்.

கண்டிப்பான ஒழுங்குமுறையைக் காட்டிலும், அன்புடனும் இணக்கமாகவும் பழகும் அணுகுமுறையையே திரு திருநாவுக்கரசு கையாள்கிறார். இத்தகைய இணக்கமான உறவே மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளவும் தங்களை மாற்றிக்கொள்ளவும் வழிகாட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.