📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 04, 2026 05:03 PM

36,000 கி.மீ. உயரத்தில் இஓஎஸ்

36,000 கி.மீ. உயரத்தில் இஓஎஸ்

ஸ்ரீஹரிகோட்டா: ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட் மூலம் ‘இஓஎஸ்-5’ பூமி கண்காணிப்புச் செயற்கைக்கோள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) அதிகாலை 2.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இச்செயற்கைக்கோள் ஏவப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நாட்டின் 19வது ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டான இது, அனைத்து நிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்து தன் இலக்கை அடைந்தது.

வழக்கமான குறைந்த புவிச் சுற்றுப்பாதைக்குப் பதிலாக பூமியில் இருந்து ஏறக்குறைய 36,000 கி.மீ. உயரத்தில் புவிநிலைச் சுற்றுவட்டப்பாதையில் இச்செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

‘ஜூசாட்-1ஏ’ என்றும் அழைக்கப்படும் இச்செயற்கைக்கோள், புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவைக் கண்காணிக்கும் நாட்டின் முதல் படமெடுக்கும் செயற்கைக்கோள் ஆகும்.

இந்தியத் துணைக்கண்டத்தின் மீது நிலைத்திருக்கும் வகையில் செயல்படவுள்ள இச்செயற்கைக்கோளில் மல்டி-ஸ்பெக்ட்ரல், ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் தொழில்நுட்ப அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த கேமராக்கள் இந்தியாவின் நிலப்பரப்பைத் தொடர்ந்து கண்காணித்து வானிலை, பேரிடர் மேலாண்மை, வேளாண்மைக்குப் பயனளிக்கும் படங்களை நிகழ்நேரத்திற்கு நெருக்கமாக வழங்கும்.

இச்செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது விண்வெளித் திட்டத்தின் மற்றொரு மைல்கல் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

இஸ்ரோவின் இச்சாதனையைப் பாராட்டிப் பிரதமர் நரேந்திர மோடி ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் தமது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் தமது வாழ்த்துப் பதிவில், “இது இஸ்ரோவின் மற்றொரு சிறப்பான சாதனை. நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தருணமுமாகும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இஸ்ரோவிற்கும் இந்தியத் தொழில்துறைக்கும் இடையிலான வளர்ந்து வரும் கூட்டாண்மையானது நமது விண்வெளித் திட்டத்திற்குப் புதிய வலிமையையும் பரிமாணத்தையும் சேர்க்கிறது,” என்றார்.

அத்துடன், இக்கூட்டாண்மை ஒட்டுமொத்த விண்வெளிச் சூழலமைப்பிலும் நாட்டின் திறன்களை விரிவுபடுத்துகிறது,” என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.