சிஎஸ்கே சிங்கம்.. 221 ரன் டார்கெட்டை வேட்டையாடிய டூ பிளெசிஸ்.. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி
சிஎஸ்கே சிங்கம்.. 221 ரன் டார்கெட்டை வேட்டையாடிய டூ பிளெசிஸ்.. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி
டல்லாஸ்: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான பாப் டூ பிளெசிஸ், தற்போது அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (டிஎஸ்கே) அணிக்காக விளையாடி அசுர சாதனை படைத்துள்ளார். 41 வயதிலும் அவரது அபாரமான பேட்டிங் திறன் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டல்லாஸில் நடைபெற்ற எம்எல்சி 2026 தொடரின் முதல் லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சியாட்டில் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. 221 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய டெக்சாஸ் அணிக்கு, அதன் கேப்டன் டூ பிளெசிஸ் ஒற்றை ஆளாக நின்று வெற்றியை தேடித்தந்தார். வெறும் 52 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் டெக்சாஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிஎஸ்கே அணியில் பல ஆண்டுகள் விளையாடி ரசிகர்களின் மனதை வென்ற டூ பிளெசிஸ், தற்போதும் அதே சூப்பர் கிங்ஸ் குடும்பத்தின் அங்கமான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளாசிய இந்த சதம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. 41 வயதிலும் வெறும் 45 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். மேலும், எம்எல்சி தொடரின் வரலாற்றில் 4 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் எம்ஐ நியூயார்க், வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ அணிகளுக்கு எதிராகவும் அவர் சதம் அடித்துள்ளார்.
எம்எல்சி தொடரில் இதுவரை 26 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டூ பிளெசிஸ் 1047 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும். அவரது சராசரி 43.62 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 167.25 ஆகவும் உள்ளது. வயது என்பது வெறும் எண் தான் என்பதை நிரூபிக்கும் வகையில், கடினமான இலக்கை எளிதாக துரத்தி, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றுள்ளார் டூ பிளெசிஸ்.