📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 18, 2026 09:34 AM

11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய அரசு ஓய்வூதியர்கள் 3 நாள் போராட்டம்

11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய அரசு ஓய்வூதியர்கள் 3 நாள் போராட்டம்

கோப்புப்படம்

சென்னை: ஓய்வூதியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசு ஓய்வூதிய விதிகள் சரிபார்ப்பு சட்டத்தை திரும்பப் பெறுவது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய அரசு ஓய்வூதியர்கள் 3 நாள் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். சென்னையில் நாளை (சனிக்கிழமை) தர்ணா நடைபெறுகிறது.

இது தொடர்பாக சிவில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசேகர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

2026-ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வுபெற்றவர்களுக்கு 8-வது ஊதியக்குழு ஓய்வூதியத்தை திருத்த வகை செய்யாதவாறு கொண்டுவரப்பட்ட மத்திய அரசு ஓய்வூதிய விதிகள் சரிபார்ப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

8-வது ஊதியக்குழுவின் பணிவரையறையை திருத்தி அதில் தற்போதைய ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதியத் திருத்தத்தை சேர்ப்பது, தேசிய ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதை அடிப்படைச் சம்பளத்துடன் இணைப்பது என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட முதல் கட்ட போராட்டத்துக்கு பிறகு 2-வது கட்டமாக மாநில தலைநகரங்களில் செப்டம்பர் 17 முதல் 19-ம் தேதி வரை போராட்டம் நடத்தப்படுகிறது.

சென்னையில் 19-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தர்ணா நடைபெற உள்ளது. 3-வது கட்டமாக நவம்பர் 25-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் பேரணியும், தர்ணா நடத்தப்பட உள்ளது. இதில் 5 ஆயிரம் ஓய்வூதியர்கள் கலந்துகொள்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய மத்திய அரசு ஓய்வூதியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் கூறும்போது, “இந்தியாவில் பாதுகாப்புத்துறை ஓய்வூதியர்கள் 36 லட்சம் பேர் உள்பட மொத்தம் 69 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். ஓய்வூதியர்கள் நலனை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஓய்வூதிய மறுசீரமைப்பு மசோதாவை திரும்பப் பெற வேண்டும்.

8-வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் மாற்றியமைக்கப்படும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. 2026-க்கு முன்பு ஓய்வுபெற்றவர்களுக்கு 8-வது ஊதியக்குழு பரிந்துரை பொருந்தாது என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார்கள். 8-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படுவது வரை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.